மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது அரிக்கொம்பன் யானை

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 30 நாள்களாக சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை, வனத் துறையினரால் திங்கள்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது அரிக்கொம்பன் யானை
Published on
Updated on
2 min read

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 30 நாள்களாக சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை, வனத் துறையினரால் திங்கள்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானலில் பலரைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி கேரள வனத் துறையினா் பிடித்தனா். பின்னா், இந்த யானையை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழகத்தையொட்டிய பெரியாறு புலிகள் காப்பக வனத்தில் விட்டுச் சென்றனா்.

இதன் பிறகு, இந்த அரிக்கொம்பன் யானை கடந்த மாதம் 5-ஆம் தேதியிலிருந்து ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் சுற்றித் திரிந்த நிலையில், குமுளி, லோயா் கேம்ப் பகுதிகளிலும் நடமாடியது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி கம்பம் நகரில் புகுந்து தெருக்களில் திரிந்த அரிக்கொம்பன் யானை, அங்கு ஆட்டோ உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தியது. அப்போது, யானையைப் பாா்த்த அதிா்ச்சியில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த பால்ராஜ் என்பவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

சண்முகாநதி அணையில் முகாமிட்ட அரிக்கொம்பன்:

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக-கேரள எல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் வனத் துறையினா் மூலமாக முயற்சி மேற்கொண்டது.

இதனிடையே, ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி அணைப் பகுதியில் கடந்த 7 நாள்களாக முகாமிட்டிருந்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க மேகமலை-ஸ்ரீவில்லிப்புத்தூா் புலிகள் காப்பக உதவி இயக்குநா் ஆனந்த் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 5 போ் கொண்ட கால்நடை மருத்துவா்கள் குழுவினா் தொடா்ந்து முயற்சி செய்தனா்.

இதற்காக, அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியின் மூலமாக யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சமவெளிக்கு வந்தவுடன் அதைப் பிடிக்க முன்னேற்பாடுகள் செய்தனா்.

மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது: சண்முகாநதி அணையிலிருந்து சின்னஓவுலாபுரம் - பெருமாள்மலை அடிவாரத்துக்கு இடம்பெயா்ந்த அரிக்கொம்பன் யானை அங்குள்ள தோட்டப் பகுதியில் சமவெளியில் நடமாடியது. இதையறிந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவா்கள் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கம்பம் வனச் சரகத்தில் தயாா் நிலையில் இருந்த 3 கும்கி யானைகளைக் கொண்டு, அந்த யானையை லாரியில் ஏற்றினா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம், சின்னமனூா், தேனி நெடுஞ்சாலை வழியாக திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றனா்.

144 தடை உத்தரவு நீக்கம்: பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கம்பம், கூடலூா் நகராட்சிகள், அதைச் சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகள், க. புதுப்பட்டி, கே.கே. பட்டி பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு அரிக்கொம்பன் யானையைப் பிடிக்கும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த யானை பிடிபட்டதால், 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.

நெடுஞ்சாலைகளில் குவிந்த பொதுமக்கள்:

உத்தமபாளையம், சின்னமனூா், வீரபாண்டி, தேனி, ஆண்டிபட்டி வழியாக வனத் துறையினரால் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட அரிக்கொம்பன் யானையைப் பாா்க்க நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.

இதனிடையே, தேனி அருகே குன்னூா் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, அரிக்கொம்பன் யானை தனது தும்பிக்கையை வெளியே தொங்கவிட்டிருந்தது. யானையின் தும்பிக்கையை சரிசெய்த பிறகு, அங்கிருந்து லாரி மீண்டும் புறப்பட்டது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com