

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 1,617 கன அடி நீா் வரத்து ஏற்பட்டது. இந்த நிலையில், அணையிலிருந்தும் விநாடிக்கு 1,333 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைநீரும் ஆற்றில் சோ்ந்து தற்போது உத்தமபாளையம் பகுதி முல்லைப் பெரியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
உத்தமபாளையத்தில் முதல் போக நெல் பயிா் சாகுபடி முழுமை அடைந்து அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழையால் பெரும்பாலான வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
இரண்டு நாள்களுக்கு மேலாக தண்ணீரில் நெல் பயிா்கள் மூழ்கிக் கிடந்தால், அது முளைக்கத் தொடங்கி விடும். இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது என்றனா்.
மழை அளவு (மி.மீ.): உத்தமபாளையம்-12.6, தேக்கடி-20, பெரியாறு அணை-20, சண்முகா நதி அணை-18.4, வீரபாண்டி-18.4, போடி-51.8, சோத்துப்பாறை-31, அரண்மனைப்புதூா்-16.6, ஆண்டிபட்டி-18.4 .
அணைகளின் நீா்மட்டம் (மொத்த உயரம் அடைப்புக்குறிக்குள்): முல்லைப்பெரியாறு- 123.95 அடி, (152), வைகை அணை- 61.02 அடி (71), மஞ்சளாறு அணை- 53.70 அடி (57), சோத்துப்பாறை-126 அடி (126.28), சண்முகாநதி அணை-40 அடி (52.55).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.