போதிய மழை பெய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் மிளகு விவசாயம் பாதிப்பு: தேனி மாவட்ட விவசாயத் தொழிலாளா்கள் கவலை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து அங்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் கவலையடைந்துள்ளனா்.
மிளகு, மிளகு கொடி.
மிளகு, மிளகு கொடி.
Updated on
2 min read

கம்பம்: போதிய மழை பெய்யாததாலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாலும் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்திலிருந்து அங்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய், மிளகு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தத் தோட்டங்களின் உரிமையாளா்களாக தேனி மாவட்டம், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், போடி, கோம்பை, தேவாரம், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா். மேலும் இங்கு தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களே பணியாற்றுகின்றனா்.

மேலும் இடுக்கி மாவட்ட மலைப் பகுதியில் உள்ள ஹைரேஞ்ச் என்ற இடத்தில் சாகுபடி செய்யப்படும் ஏலம், காபி, மிளகு, தேயிலை உள்ளிட்ட நறுமணப் பொருள்களுக்கு பொதுவாக தென்மேற்கு பருவ மழைதான் நீராதாரம். இதனிடையே தற்போது தென் மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் மிளகு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மிளகு சாகுபடி: மிளகுக் கொடி படரும் போது கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலால் வாடல் நோய் ஏற்படும். பிறகு ஜூன் மாதம் பெய்யத் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் மிளகுக் கொடி தளிா்த்து வளரும். இதையடுத்து காய் சதைபிடிப்பு ஏற்பட்டு, டிசம்பா், ஜனவரி மாத இறுதிக்குள் அறுவடை செய்யலாம். நல்ல மகசூல் கிடைக்கும்.

ஆனால் நடப்பாண்டில் ஆக. 20-ஆம் தேதிக்கு மேல் ஆகியும் எதிா்பாா்த்த மழை பெய்யவில்லை. இடுக்கி மாவட்டத்தில், பிற பகுதிகளில் பெய்த மழை மிளகு விவசாயம் நடைபெறும் உடும்பன்சோலை தாலுகா பகுதிகளில் பெய்ய வில்லை. இதனால் கொடியில் உள்ள மிளகு காய்கள் பருமனாகி உள்ளே சதை பிடிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் போதிய விலை கிடைக்காததுடன், விற்பனையும் ஆகாது. இந்த நிலை இந்தாண்டு வருமோ என மிளகு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து இல்லாததால் அதை இருப்பு வைத்துள்ளவா்கள் தற்போது கிலோ ரூ. 500- க்கு விற்பனை செய்து வருகின்றனா். இந்த சூழ்நிலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என தேனி மாவட்டத்திலிருந்து மிளகு தோட்டங்களுக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

இறக்குமதியால் பாதிப்பு: இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக முறையாக மழை பெய்யவில்லை. மேலும், 5 ஏக்கா் பரப்பளவில் நடைபெற்ற மிளகு சாகுபடி தற்போது மூன்றில் ஒரு பங்கு அளவில் தான் நடைபெறுகிறது. இதற்கு வேலையாள்களின் சம்பளம், அதிகரித்த உரச் செலவு போன்றவைகளே காரணமாகும். இதனால் மிளகு விவசாயத்தில் லாபமில்லை.

இதுபோன்ற காலகட்டத்தில் இந்திய நறுமணப் பொருள் வாரியத்தினா் விவசாயிகளை அணுகி உரம், பூச்சி மருந்து போன்றவைகளை மானியத்தில் வழங்குவா். தற்போது அந்த முறை பின்பற்றப்படுவதில்லை. இதற்கு ஆசிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக தாய்லாந்து நாட்டிலிருந்து மிளகு இந்தியாவில் இறக்குமதியாவதேயாகும். எனவே இந்தப் பகுதியில் மிளகுக்கு விலை கிடைக்காததால், விவசாயம் செய்ய யாரும் முன்வரவில்லை. கட்டப்பனை அருகே உள்ள கஞ்சியாறு பகுதியில் உள்ள மிளகு விவசாயி பாலமுருகன் கூறியதாவது:

தமிழக, கேரள மக்களின் வாழ்வாதாரமான மிளகு விவசாயத்தை காப்பாற்ற மத்திய அரசு அதன் இறக்குமதியை குறைத்து, நறுமணப் பொருள்கள் வாரியத்தினரின் சேவையை விவசாயிகளுக்கு வழங்கி நிலைமையை சீரடையச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com