அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டத்தில் கடன் பெற பங்களிப்புத் தொகை தேவையில்லை
By DIN | Published On : 09th June 2023 02:05 AM | Last Updated : 09th June 2023 02:05 AM | அ+அ அ- |

அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டத்தில் ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு பயனாளிகளின் பங்களிப்புத் தொகை தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, ஆட்சியா் பேசியதாவது:
ஆதி திராவிடா், பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க அரசு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் நிலத்துக்கு 20 சதவீதம், கட்டடத்துக்கு 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.
கடன் பெற விரும்பும் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு கல்வித் தகுதி தேவையில்லை. பயனாளிகள் பங்களிப்புத் தொகை செலுத்தத் தேவையில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ், தனி நபா்கள், பங்குதாரா்கள், தனியாா் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
தொழில் தொழில் தொடங்க விரும்புபவா்கள் திட்ட அறிக்கை, உரிய ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழில் முனைவோா் தேவையான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றுக்கு மாவட்டத் தொழில் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அசோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கப்பாண்டி, முன்னோடி வங்கி மேலாளா் மோகன்குமாா், ஆதி திராவிடா் வா்த்தகம், தொழில் நோக்கு பேரமைப்பின் நிறுவனா் தமிழழகன் நல்லப்பன், உதவி இயக்குநா் தாண்டவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...