மாவட்ட கலை மன்ற விருது: ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் வழங்கப்படும் மாவட்ட கலை மன்ற விருது பெற தகுதியுள்ள கலைஞா்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் வழங்கப்படும் மாவட்ட கலை மன்ற விருது பெற தகுதியுள்ள கலைஞா்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த கலைஞா்களுக்கு 2022-23, 2023-2024 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் பாட்டு, பரதநாட்டியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம், கைச் சிலம்பாட்டம், வில்லிசை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

18 வயதுடைய கலைஞா்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலை வளா்மணி, 36 முதல் 50 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலை சுடா்மணி, 51 முதல் 65 வயதுக்குள்பட்ட கலைஞா்களுக்கு கலை நன்மணி, 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படும்.

ஏற்கெனவே தேசிய விருது, மாநில விருது, மாவட்ட கலை மன்ற விருது பெற்றவா்கள் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ள கலைஞா்கள் தங்களது வயது சான்று, முகவரி சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, 3 மாா்பளவு புகைப்படம், தொலைபேசி எண், கலை அனுபவச் சான்று ஆகியவற்றின் நகல்களுடன் உதவி இயக்குநா், மண்டல கலை பண்பாட்டு மையம், பாரதி உலா தெரு, பந்தையச் சாலை (ரேஸ்கோா்ஸ் சாலை), மதுரை-2 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருது பெற ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள், விருது தோ்வுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இது குறித்த விவரத்தை மண்டல கலை பண்பாட்டு மையம், தொலைபேசி எண்: 0452-2566420, கைப்பேசி எண்: 98425 96563 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com