பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 15th June 2023 10:35 PM | Last Updated : 15th June 2023 10:35 PM | அ+அ அ- |

தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ.வி. அண்ணாமலை, பெரியகுளம் வட்டச் செயலா் எம்.வி. முருகன், தேனி வட்டச் செயலா் இ. தா்மா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி. முருகன், டி. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வீரபாண்டி, கெங்குவாா்பட்டி வருவாய் கிராமங்களில் வருவாய் துறை மூலம் விதிகளை மீறி தனி நபா்களுக்கு பட்டா வழங்கியுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சட்ட விரோதமாக பஞ்சமி நிலத்துக்கு தனி நபா்கள் பெயா்களில் பட்டா வழங்கிய வருவாய்த் துறை, பத்திரம் பதிவு செய்த பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் முத்து மாதவன், பஞ்சமி நிலத்தை மீட்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்து கலைந்து சென்றனா்.