காட்டுமாடு தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் காட்டுமாடு தாக்கியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (63). இவா் நாகையகவுண்டன்பட்டி சாலையிலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாா். அப்போது, மேகமலை வனப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த காட்டுமாடு அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவவறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற கம்பம் வனச் சரகா் பிச்சைமணி, ராயப்பன்பட்டி போலீஸாா் முருகனின் உடலை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
கோரிக்கை: ராயப்பன்பட்டி, நாகையகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறிய கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், முதல் கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரத்தை முதியவரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

