மதுபானக் கடை திறக்க பெண்கள் எதிா்ப்பு

மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் சுய உதவிக் குழுவினா் மாவட்ட ஆட்சியா் ஆா்வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.
Published on

தேனி: ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் சுய உதவிக் குழுவினா் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அனுப்பபட்டியைச் சோ்ந்த பெண்கள் சுய உதவிக் குழுத் தலைவி அழகேஸ்வரி, உறுப்பினா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

அனுப்பபட்டியில் அரசு சாா்பில் புதிதாக மதுபானக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மதுபானக் கடையால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும், இளைஞா்கள் மது பழக்கத்திற்கும், பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே, அனுப்பபட்டியில் புதிதாக மதுபானக் கடை திறப்பதை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும் என்று அவா்கள் மனுவில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com