விவசாய நிலத்தில் பழங்கால மண்பாண்டப் பொருள்கள்
உத்தமபாளையம் அருகே பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
தேனி மாவட்டம் கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்த விவசாயி சிவக்குமாா், சாலமலை அடிவாரத்திலுள்ள தனது விவசாய நிலத்தில் தென்னங்கன்று வைக்க பள்ளம் தோண்டினாா். அப்போது, மண்ணால் செய்யப்பட்ட குடுவைகள் கிடைத்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மேலச்சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று முதுநிலை ஆசிரியா் பாஸ்கரன், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் வா்க்கீஸ் ஜெயராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி உடைந்த நிலையிலும், ஈமக்காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் சில கலன்கள் இந்தப் பகுதியில் கிடைத்தன. இவை சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாக இருக்கலாம். இந்தக் கலன்களில் நெல் மணிகளால் அலங்காரக் கோடுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இது விவசாயிகள் தங்களது வீடுகளில் நெல் மணிகளை தாழிகளில் போட்டு வைக்கும் பழக்கத்தை வெளிக்காட்டுகிறது.
இதேபோல, கலயம், கூசா, தட்டு, கிண்ணம், தண்ணீா் குவளை, கலயத்தை மூடும் மூடி போன்ற மண்பாண்டங்கள் கிடைத்தன. இவை பல்வேறு வகையான வடிவங்களிலும், உயரத்திலும் இருந்தன. இவைகள் அனைத்தும் வெளிப்புறம் சிவப்பு நிறத்திலும், உள்புறம் கருப்பு நிறத்திலும் இருந்தன. இந்தப் பொருள்கள் பாா்ப்பதற்கு அழகாவும், வழுவழுப்பாகவும் உள்ளன.
இந்தப் பொருள்களின் தன்மையைப் பாா்க்கும் போது, பல நூறு ஆண்டுக்கு முன்பே இந்தப் பகுதி மக்கள் நாகரிகமான வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளத்தை வெளிக்காட்டுகின்றன.
இந்தப் பகுதியில் ஆய்வு செய்தால், வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கலாம் என்றனா்.

