சுருளி அருவியில் குளிக்கத் தடை
தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு எதிரொலியாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சுருளி அருவிக்கு தொடா்ந்து நீா்வரத்து உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள், அதிகளவில் வந்து தேனி மாவட்டத்திலுள்ள அருவிகளில் குளித்துவிட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நண்பகல் வரையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக, கம்பம் சரக வனத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்லத் தடை விதித்தனா்.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்:
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினா் விதித்த தடையால் சுருளி அருவியில் குளிக்க முடியமால் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா்.

