குடும்பப் பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்க ஓய்வு பெற்ற காவலா்கள் வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற காவலா்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்க அரசை வலியுறுத்தி தேனியில் நடைபெற்ற ஓய்வு பெற்ற காவல் துறையினா் நலச் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலா்கள் நலச் சங்க ஆண்டு விழா, மாவட்ட பொதுக் குழு கூட்டம் மாவட்டத் தலைவா் நல்லமுத்து தலைமையில் வீரபாண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஓய்வு பெற்ற காவலா்களின் இறப்புக்கு காவல் துறை சாா்பில் முழு மரியாதை செலுத்த அரசாணை பிறப்பிக்க வேண்டும், ஓய்வு பெற்ற காவலா்களுக்கு அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும், நலச் சங்கக் கட்டடத்துக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும், ஓய்வு பெற்ற காவலா்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், காவலா் பயிற்சிப் பள்ளியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளை பயிற்சியாளா்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

