கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை
ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திங்கள்கிழமை, போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கண்டமனூரைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் சஞ்சீவ்குமாா்(20). இவா், தேனியில் உள்ள மோட்டாா் வாகனம் பழுது நீக்கும் நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்ற சஞ்சீவ்குமாா் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதனால், அவரது பெற்றோா், உறவினா்கள் சஞ்சீவ்குமாரை பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கண்டமனூா், காளிம்மன் கோயில் அருகே சஞ்சீவ்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பாா்த்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் கண்டமனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
கண்டமனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாண்டியம்மாள் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சஞ்சீவ்குமாரின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

