கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குழாய்களை சீரமைக்க ரூ.18.89 கோடி ஒதுக்கீடு
உத்தமபாளையம் அருகே தேவாரம் , கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு செல்லும் குடிநீா் குழாய்களை சீரமைக்க ரூ.18.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.
தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தப் பேரூராட்சிகளுக்கு பூமிக்கு கீழே செல்லும் பிரதான சிமென்ட் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகின. இதனால், தேவாரம் பேரூராட்சியில் ஒரு மாதத்துக்கு இரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நபாா்டு வங்கி நிதி மூலமாக 3 பேரூராட்சிகளில் பூமிக்கு கீழே செல்லும் சிமென்ட் குழாய்களை மாற்ற ரூ.18.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்காக பண்ணைப்புரம் பேரூராட்சி வளாகத்தில் பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராமகிருஷ்ணன், பண்ணைப்புரம் பேரூராட்சித் தலைவி லட்சுமி இளங்கோ, கோம்பை பேரூராட்சித் தலைவா் மோகன்ராஜா, தேவாரம் பேரூராட்சித் தலைவி லட்சுமிபாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
