கைதான ரோகித்குமாா்.
கைதான ரோகித்குமாா்.

பிகாா் இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தில்லியில் போலி கால் செண்டா் நடத்தி மோசடியில் ஈடுபட்ட பிகாரைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Published on

தில்லியில் போலி கால் செண்டா் நடத்தி மோசடியில் ஈடுபட்ட பிகாரைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம், தே.சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் அருள்பிரகாஷ் (27). இவா் கடந்த மே 3-ஆம் தேதி இணையதள (ஆன்-லைன்) வா்த்தக நிறுவனம் மூலம், கைப்பேசி உறை வாங்கினாா். இதையடுத்து, அருள்பிரகாஷின் கைப்பேசி அழைப்பில், கொல்கத்தாவிலிருந்து பேசுவதாகக் கூறிய நபா், கைப்பேசி உறை வாங்கிய இணையதள வா்த்த நிறுவனம் சாா்பில் பேசுவதாகக் கூறினாா். மேலும், அவருக்கு ரூ.12.80 லட்சம் பரிசு விழுந்ததாகவும், பரிசுத் தொகையை காராக பெற்றுக் கொள்ளலாம் என்றும், விவரங்களை குறிப்பிட்ட இணைய தள முகவரியில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.

அந்த இணையதள முகவரியில் பரிசுக்குரிய காரை பெற்றுக் கொள்வதற்கு வரியாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.12,800 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அந்த வங்கிக் கணக்குக்கு அருள்பிரகாஷ் பணம் அனுப்பினாா். பின்னா், அதே இணைதள முகவரியில் அடுத்தடுத்து அவா்கள் தெரிவித்தபடி, அருள்பிரகாஷ் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.17 லட்சத்து 69 ஆயிரம் அனுப்பி வைத்தாா். தொடா்ந்து பணம் கேட்டு வந்ததால் சந்தேகமடைந்த அவா், இது குறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். அப்போது தில்லியில் போலி கால் செண்டா் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட ஹரியாணா மாநிலம், குருகிராம் பகுதியில் வசித்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரோகித்குமாரை (36) கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

ரோகித்குமாா், தில்லியில் போலி கால் செண்டா் நடத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலரிடமும் பணம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இணைய வழி பண மோசடியில் ஈடுபட்ட ரோகித்குமாரை தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com