வேலை வாங்கித் தருவதாக ரூ. 6.30 லட்சம் மோசடி
தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 6.30 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேனி அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு பழனிசெட்டிபட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழில் பழகுநராகப் பயிற்சி பெற்று வந்துள்ளாா். அப்போது, ராஜேஸுக்கு தேனி, பங்களாமேடு, அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் பழனிவேல் (59) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
இந்த நிலையில், பழனிவேல், ராஜேஸ் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 6.30 லட்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பழனிவேல் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்துள்ளாா்.
மேலும், பழனிவேலிடம் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி காவல் நிலையத்தில் ராஜேஸ் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் பழனிவேல் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
