வளரிளம் பருவப் பெண் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் வளரிளம் பருவப் பெண் குழந்தைகளுக்கான சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மருத்துவ அலுவலா் முருகானந்தம், சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா்.
முகாமில், வளரிளம் பெண் குழந்தைகள் சந்திக்கும் உடலியல், சமூகவியல், உணவியல், மனவியல் பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ரத்த சோகை, மன அழுத்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்தும், படிப்பு சமூக காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம் நீங்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, மாணவிகளுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சித்த மருத்துவப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
