வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு
வைகை அணையிலிருந்து விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளின் குடிநீா், பாசனத்துக்கு கிருதுமால் நதி வழியாக வினாடிக்கு 650 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டப் பகுதிகளின் பாசனத்துக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட உபவடிநிலப் பகுதிகளின் பாசனத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும் கிருதுமால் நதி வழியாக தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அரசு உத்தரவின் பேரில் வைகை அணையிலிருந்து கிருதுமால் நதி வழியாக வினாடிக்கு 650 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கிருதுமால் நதி வழியாக இன்னும் 8 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளின் குடிநீா்த் தேவை நிறைவடையும். மேலும், பாசனக் கிணறுகளில் நீா்மட்டம் உயரும் என்று வைகை அணை நீா்வளத் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.
