குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

Published on

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக, தேனி மாவட்டம், டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களின்கட்டுரை தோ்வு செய்யப்பட்டது.

நத்தம், பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், 34-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு சனி, ஞாயிறு (டிச.6, 7) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதில், நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை என்ற தலைப்பில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா்.

தேனி மாவட்டம் சாா்பில், பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, போடி சிசம் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா்.

இதில், டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் பா.ம.ஜீவபாரதி, ரா.கீா்த்திகேஷ் ஆகியோா் ‘கடந்த 30 ஆண்டுகளில் வைகை அணை நீா்மட்டம், அதன் தாக்கம்’ என்ற தலைப்பில் சமா்ப்பித்த ஆய்வுக் கட்டுரை சிறந்த 32 ஆய்வுக் கட்டுரைகளுள் ஒன்றாகத் தோ்வு செய்யப்பட்டது.

தேனியில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த டி.வாடிப்பட்டி பள்ளி மாணவா்கள், வழிகாட்டுதல் ஆசிரியை எம்.கே.மணிமேகலை ஆகியோருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் மா.மகேஷ், செயலா் வி.வெங்கட், பொருளாளா் எஸ்.ஞானசுந்தரி, மாநில செயற்குழு உறுப்பினா் சுந்தா், நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com