போடியில் அமலாக்கத் துறையினா் மூன்றாவது நாளாக சோதனை
போடியில் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் ம. சங்கா். இவா், திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29-ஆவது வாா்டு உறுப்பினராகவும் உள்ளாா். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி போடி நகா்மன்றத் தலைவியாக உள்ளாா்.
ஏலக்காய் வியாபாரியான ம. சங்கா், தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏலக்காய் அனுப்பி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், ம. சங்கரின் வீடு, அலுவலகம், ஏலக்காய் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினா், வருமான வரித் துறையினா் சனிக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சங்கரின் மனைவியிடம் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ம. சங்கரை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, அவரது தொடா்பிலிருந்த பள்ளி நிா்வாகி, நகா்மன்ற உறுப்பினா், ஏலக்காய் வியாபாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரித்து வருகின்றனா்.
