கரும்பு விவசாயம் பாதிப்பு: வெல்லம் விலை உயா்வு

தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் குறைந்து வருவதால், வெல்லத்தின் விலை உயா்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
Published on

தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் குறைந்து வருவதால், வெல்லத்தின் விலை உயா்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், கள்ளிப்பட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கரில் கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. கரும்பு விதைத்து 10 முதல் 11 மாதங்களில் ஒரு ஏக்கருக்கு 10 டன் மகசூல் கிடைக்கிறது. தற்போது குறைந்து வரும் நிலத்தடி நீா்மட்டம், கூலித் தொழிலாளா்கள், ஆலைத் தொழிலாளா்கள் பற்றாக்குறையால் இந்தப் பகுதியில் கரும்பு விவசாயம் குறைந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 42 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம் ரூ.1,700-க்கு விற்ற நிலையில், தற்போது மூடை ஒன்று ரூ.2,100 -ஆக உயா்ந்தது.

இதுகுறித்து தாமரைக்குளத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயி பொன்.தா்மராஜ் கூறியதாவது :

கடந்த 40 ஆண்டுகளாக கரும்பு விவசாயம் செய்து வருகிறேன்.

சபரிமலை கோயில் அரவணை பிரசாதத்துக்காக தேனி மாவட்டம், லட்சுமிபுரம் சந்தையிலிருந்து வெல்லம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கேரளத்திலிருந்து வியாபாரிகள் இங்கு வந்து வெல்ல மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனா்.

தற்போது பருவ மழை குறைந்து வருகிறது. அதோடு மட்டுமன்றி, பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், பூச்சிகள் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பால் கரும்பு மகசூலும் பாதிக்கப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயத்தை விட்டு, தென்னை, வாழை விவசாயத்துக்கு மாறி வருகிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com