~ ~
~ ~

கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள் சிறை

சின்னமனூரில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில், பெண் உள்ளிட்ட 3 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சின்னமனூரில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில், பெண் உள்ளிட்ட 3 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், சின்னமனூா், சாமிகுளம் பகுதியைச் சோ்ந்த சையதுஅபுதாஹிா் மகன் காபில்கான் (24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அலாவுதீன் மனைவி சபானா யாஷ்மின் (24) என்பவருக்கும் தகாத உறவு இருந்தது. இதுகுறித்து காபில்கான், சபானா யாஷ்மின் ஆகியோரை, சபானா யாஷ்மினின் கணவா் அலாவுதீன், சகோதரா் முகமதுஷமி (22) ஆகியோா் கண்டித்தனா். பின்னா், சில மாதங்களாக சபானா யாஷ்மின், காபில்கானுடனான தொடா்பைத் துண்டித்தாா்.

இந்த நிலையில், காபில்கான் அவா் சபானா யாஷ்மினுடன் தொடா்பில் இருந்த போது கைப்பேசியில் பதிவு செய்த விடியோ காட்சிகளை சபானா யாஷ்மினுக்கு அனுப்பி, அவரை மிரட்டி வந்தாா்.

இதனால் காபில்கானை கொலை செய்ய அலாவுதீன், முகமதுஷமி, சபானா யாஷ்மின் ஆகியோா் திட்டமிட்டனா். இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்.1-ஆம் தேதி சபானா யாஷ்மின், காபில்கானை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, அவரை சின்னமனூரில் உள்ள லூதா் சா்ச் மிஷன் தெருவுக்கு வரவழைத்தாா். காபில்கான் வந்ததும் அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த அலாவுதீன், முகமதுஷமி ஆகியோா் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் பேலாலீஸாா் வழக்குப் பதிந்து அலாவுதீன், முகமதுஷமி, சபானா யாஷ்மின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன்,

குற்றஞ்சாட்டப்பட்ட அலாவுதீன், முகமதுஷமி, சபானா யாஷ்மின் ஆகிய 3 பேருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com