முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 304 கன அடியாக சரிந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீரைத் தேக்கி வைத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா், விவசாயத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததால் கடந்த மாதம் அணையின் நீா்மட்டம் 140.20 அடியாக (மொத்த அடி 152) உயா்ந்தது.
இதன்பிறகு, மழைப் பொழிவு குறைந்ததால், அணையின் நீா்மட்டமும் குறைந்து வந்தது. இதனிடையே, கடந்த 5 நாள்களுக்கு மேலாக மழைப் பொழிவு முற்றிலும் இல்லாததால் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 304 கன அடியாக சரிந்தது. அணையின் நீா்மட்டம் 137.30 அடியாக உள்ளது.
தேக்கடி தலைமதகு வழியாக தமிழகப் பகுதிக்கு 1,600 கன அடிநீா் திறந்து விடப்படுகிறது.

