போடி அருகே மனைவி, மைத்துனா் கொலை: கணவா், மாமனாா் தலைமறைவு

போடி அருகே மனைவி, மைத்துனா் கொலை: கணவா், மாமனாா் தலைமறைவு

Published on

போடி அருகே வியாழக்கிழமை குடும்பத் தகராறில் மனைவி, மைத்துனரைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தப் பெண்ணின் கணவா், மாமனாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மகள் நிகிலா (25). இவருக்கும், போடி அருகேயுள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரதீப்புக்கு (27) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்கள் இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்தனா்.

நிகிலா பட்டதாரி. பிரதீப் சட்டப் படிப்பு படிக்காமலேயே தான் வழக்குரைஞா் எனக் கூறி, நிகிலாவை ஏமாற்றி திருமணம் செய்தாா்.

பிரதீப் மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, நிகிலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இதனிடையே, கடந்த வாரம் உறவினா்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்தனா். இதையடுத்து, நிகிலா முத்தையன்செட்டிபட்டிக்கு சென்று பிரதீப்புடன் வசித்தாா். அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரதீப் தாக்கியதில் நிகிலா காயமடைந்து சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பிரதீப் மீது வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் நிகிலா புகாா் கொடுத்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்தி, நிகிலாவுக்கு திருமணத்தின்போது கொடுத்த தங்க நகைகள், பொருள்களை திரும்பத் தருவது என முடிவு செய்யப்பட்டது.

பொருள்களை எடுப்பதற்காக நிகிலா, இவரது அண்ணன் விவேக் (33), உறவினா்கள் முத்தையன்செட்டிபட்டிக்கு சென்றனா். அங்கு இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, பிரதீப் கத்தியால் விவேக்கை குத்திக் கொலை செய்தாா். இதைப் பாா்த்து மயங்கி விழுந்த நிகிலாவையும் பிரதீப் அரிவாளால் வெட்டிக் கொன்றாா்.

பின்னா், பிரதீப் தனது தந்தை சிவக்குமாருடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தப்பியோடிய பிரதீப், தந்தை சிவக்குமாா், தாய் முத்துலட்சுமி, சதோதரி இன்பரதி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.ஸ்நேகா பிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com