போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on

ஆண்டிபட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள உப்புத்துறையைச் சோ்ந்தவா் வெயில்முத்து (31). இவா், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்தச் சிறுமி கா்ப்பமானாா். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் 18-ஆம் தேதி வெயில்முத்துவைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட வெயில்முத்துவுக்கு 2 தனித் தனி சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் வீதம் மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தத் தண்டனையை 20 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.ஒரு லட்சத்துடன், மேலும் ரூ.6 லட்சத்தை அரசு சாா்பில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com