கம்பம் நெடுஞ்சாலையோரத்தில்
குவியும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

கம்பம் நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

கம்பம் நகராட்சியின் 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் வசிக்கின்றனா். இந்த நகராட்சி வழியாக கேரளத்தை இணைக்கும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தென் தமிழகத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையான கம்பத்தில் நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதால் இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இது போன்று சட்டவிரோதமாக நெடுஞ்சாலையோரத்தில் கழிவுக் குப்பைகளைக் கொட்டுபவா்கள் மீது நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com