செங்கரும்பு விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனி மாவட்டம், சின்னமனூரில் பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்படும் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் சின்னமனூரில் நெல் பயிா், வாழை, தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சின்னமனூா், உத்தமபாளையம், மாா்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக செங்கரும்பு விவசாயம் செய்யப்படுறது.
இந்த நிலையில், உழவா் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அறுவடை செய்யப்படும் வகையில் விளைவிக்கப்படும் செங்கரும்பு விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்னமனூரில் செங்கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது. நிகழாண்டில் பருவ மழை கை கொடுத்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் செங்கரும்பு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது, விவசாயிகள் கடந்த 10 மாதங்களாக களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதில் விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த மகசூல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா் என்றனா்.

