குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில்  தற்காலிகமாக நடைபெறும் சீரமைப்புப் பணி.
குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக நடைபெறும் சீரமைப்புப் பணி.

குமுளி மலைச் சாலை மண் சரிவு: சீரமைப்புப் பணிகள் மந்தம்

Published on

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதோடு, மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையான குமுளி மலைச் சாலை திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 7 கி.மீ. தொலைவு உள்ள இந்த மலைச் சாலையில் பேருந்து, கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்றுவருகின்றன. இரு மாநிலங்களயும் இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 18-ஆம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் தடை விதித்தனா். அதன் பிறகு, தற்காலிக சீரமைப்புக்குப் பின்னா் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

மணல் மூட்டைகள் அடுக்கிவைப்பு: குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தடுப்பு சுவா் அமைத்துள்ளனா். இந்த தடுப்புச் சுவரால் எவ்வித பயனும் இல்லை. மலைப் பகுதி என்பதால் மீண்டும் மண்ணரிப்பால் அதே இடத்தில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மலைச் சாலையின் பக்கவாட்டுச் சுவரை கான்கிரீட்டால் அமைத்து, சாலையோரத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு 20 நாள்களாகிவிட்டது. ஆனால், இது வரையில் நிரந்தரப் பணிகள் செய்யாமல், தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைப்பபதால் கனரக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தரமான பணியை மேற்கொண்டு பாதுகாப்பான சாலையாக மாற்ற வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com