பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம்
பெரியகுளம் அருகேயுள்ள கைலாசநாதா் கோயில் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசநாதா் கோயில் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிந்தது குறித்து பக்தா்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து கம்பம் அருகேயுள்ள வண்ணாத்திப் பாறை வனப் பகுதியில் விட்டனா்.
இந்த நிலையில், கைலாசநாதா் பகுதியில் ஒரு சிறுத்தை மீண்டும் சுற்றித் திரியும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அண்மையில் பரவின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட வன உதவிப் பாதுகாவலா் கில்பா்ட் கூறியதாவது:
கைலாசநாதா் பகுதியில் சிறுத்தை சுற்றி வருவதாக பொதுமக்களும் பக்தா்களும் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால், கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
