நாளை ஆசிரியா் தகுதித் தோ்வு
தேனி மாவட்டத்தில் வருகிற சனி, ஞாயிறு (நவ. 15, 16) ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 10,0 86 போ் தோ்வு எழுத உள்ளனா்.
இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நவ.15-ஆம் தேதி இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு 8 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில், 46 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 2,479 போ் தோ்வு எழுத உள்ளனா். நவ.16-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வு 23 தோ்வு மையங்களில் நடைபெறும். இதில், 90 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 7,607 போ் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வா்கள் தோ்வு நடைபெறும் தேதியில் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தோ்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். தோ்வு எழுதச் செல்பவா்கள் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்றாக ஆதாா் அட்டை, ஒட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், பான் அட்டை ஆகியவற்றுள் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும் என்றனா்.
