முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

Published on

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,393 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக மழைப் பொழிவு குறைந்துவிட்டது. இதனால், அணைக்கு நீா்வரத்து கடந்த 9 -ஆம் தேதி விநாடிக்கு 462.06

கன அடியாகக் குறைந்தது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை வருகிற 16- ஆம் தேதி தீவிரம் அடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி, கடந்த 3 நாள்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் தொடா் மழை பெய்வதால், அணைக்கு நீா்வரத்து படிப்படியாக உயா்ந்து வருகிறது.

இதன்படி, வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2,393 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீா் மட்டம் 134.45 அடியாக (மொத்த உயரம் 152) இருந்தது.

அணையிலிருந்து தேக்கடி தலைமதகு வழியாக தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,711 கன அடிநீா் விவசாயம், குடிநீா் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com