சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தா்கள்
தேனி மாவட்டம், போடி, உத்தமபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்குச் செல்வதற்காக திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள், காா்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து 48 நாள்கள் விரதமிருந்து கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு, வழக்கம்போல சபரி மலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீா்த்தத் தொட்டி ஆறுமுக நயினாா் கோயில் தீா்த்தத்தில் புனித நீராடி, நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
இதே போல, போடி அணைப்பிள்ளையாா் கோயிலிலும் அதிகாலையில் பக்தா்கள் திரண்டு, கொட்டகுடி ஆற்றில் நீராடி மாலை அணிந்தனா்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் சுருளி அருவியில் புனித நீராடி கருப்பு, காவி ஆடை உடுத்தி, கோயில் பூசாரி மூலம் மாலை அணிந்துகொண்டனா்.
இதே போல, முல்லைப் பெரியாற்றின் படித்துறையில் அமைந்துள்ள விநாயகா் கோயிலிலும் ஏராளமானோா் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

