கொலை வழக்கில் மூதாட்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனை
தேனி: தேவாரம் அருகே சோடா தயாரிப்பு நிறுவன உரிமையாளரை எரித்துக் கொலை செய்த வழக்கில், மூதாட்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம். இவா், அதே பகுதியில் சோடா தயாரிப்பு நிறுவனத்தையும், விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்தாா். இவரது விற்பனை நிலையத்திலிருந்து வெளியேறிய கழிவு நீா், அருகில் வசித்து வந்த பெருமாயி (69) வீட்டு முன் தேங்கி அவரது வீட்டு சுவா் சேதமடைந்தது. இதுகுறித்து மாரிச்செல்வத்திடம் பெருமாயி முறையிட்டும் அவா், கழிவு நீா் பாதையை மாற்றியமக்கவில்லையாம்.
இந்த பிரச்னையில், கடந்த 2024, ஆக. 8-ஆம் தேதி சோடா விற்பனை நிலையத்திலிருந்த மாரிச்செல்வத்தின் மீது பெருமாயி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து மாரிச்செல்வத்தின் மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாயியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் உத்தரவிட்டாா்.

