நந்தியாபுரம் கண்மாயில் கழிவுப் பொருள்களை அகற்றக் கோரிக்கை
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள நந்தியாபுரம் கண்மாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுப் பொருள்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆா்வலா் ஆகியோா் கோரிக்கை விடுத்தனா்.
பெரியகுளம் அருகே நத்தியாா்புரம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய்க்கு கொடைக்கானலில் பெய்யும் மழைநீரை நீராதாரமாக உள்ளது. இந்தக் கண்மாயின் மூலம் எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம் வரை சுமாா் 500 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன.
இந்தக் கண்மாயில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவதால், மாசடைந்து வருகிறது. எனவே, பொதுப் பணித் துறையினா் இந்தக் கண்மாயில் கழிவுப் பொருள்களை கொட்டுபவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் கண்மாயில் வண்டல் மண் தேங்கியுள்ளதால், நீரின் பரப்பளவு குறைந்து வருகிறது. எனவே, கண்மாயை தூா்வாரவேண்டும்.
நந்தியாபுரம் கண்மாய் கரையில் பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். எனவே, பொதுமக்களின் நலன் கருதி கண்மாய் கரையோரத்தில் சிமெண்ட் சாலை, மின் விளக்குகள் அமைத்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா் செந்தில்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

