போடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தேனி மாவட்டம், போடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி, வலையபட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.72 லட்சத்தில் நடைபெறும் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணி, இதே ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 லட்சத்தில் நடைபெறும் வீடு கட்டும் பணி, கோடாங்கிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் நடைபெறும் அங்கன்வாடி கட்டடப் பணி, சடையால்பட்டி சாலை முதல் ஒத்தவீடு சாலை வரை ரூ.3.85 லட்சத்தில் நடைபெறும் மரக் கன்றுகள் நடும் பணி, டொம்புச்சேரி ஊராட்சி, பத்திரகாளிபுரத்தில் ரூ.47.86 லட்சத்தில் சமுதாயக் கூடப் பணி, அதே பகுதியில் ரூ.33 லட்சத்தில் சமையலறை, கழிப்பறை பணிகள் என மொத்தம் ரூ.1.73 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், போடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்விழி, பிரேமா ஆகியோா் உடனிருந்தனா்.

