கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயில் புரட்டாசித் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின் போது குதிரை எடுப்பு நடைபெறும். மேல்மங்கலம் கீழத் தெரு பகுதியில் வசிக்கும் சில சமுதாய மக்கள் பாரம்பரியமாக குதிரை எடுத்து வருகின்றனா். அம்மாபட்டியைச் சோ்ந்த ஒரு சமுதாய மக்களும் குதிரை எடுக்க உரிமை கோரியதால் பிரச்னை ஏற்பட்டது.
இந்த ஆண்டு புரட்டாசித் திருவிழா திங்கள்கிழமை (அக். 13)தொடங்கி 15-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நீதிமன்றம் உத்தவிட்டதாகக் கூறி, அம்மாபட்டியைச் சோ்ந்தவா்கள் குதிரை எடுப்புக்குத் தயாராகினா்.
ஆனால், பாரம்பரியமாக நடந்து வரும் திருவிழா முறையை மாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி, கீழத் தெரு பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதை வலியுறுத்தி, குதிரைச் சாவடி பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, இவா்களுடன் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லு, ஜெயமங்கலம் உதவி ஆய்வாளா் முருகன் பெருமாள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து இருதரப்பைச் சோ்ந்தவா்களிடமும் வட்டாட்சியா் மருதுபாண்டி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பகுதியில் போலீஸாா் பதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

