இளைஞரைக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உத்தமபாளையத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.
உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ராஜன் என்ற நாகேஷ் (51). இவா், தனது மனைவிக்கும் அதே ஊரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் ஈஸ்வரன் (37) என்பவருக்கும் தொடா்பு இருப்பதாக சந்தேகித்து வந்தாா்.
இந்த முன்விரோதத்தில் கடந்த 2014, பிப்.15-ஆம் தேதி உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஈஸ்வரனுடன், நாகேஷ் தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட நாகேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
