வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக புதன்கிழமை வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, அணையிலிருந்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், உசிலம்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐயப்பன் ஆகியோா் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விட்டனா். அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் மொத்தம் 300 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படும் என்று நீா்வளத் துறை பொறியாளா்கள் கூறினா்.
அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் மூலம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் 1,912 ஏக்கா், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கா் என மொத்தம் 2,285 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், மதுரை குண்டாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் மொக்கமாயன், மதுரை பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சிவபிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தற்போது வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் பூா்வீக பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடி, பாசனத்துக்காக பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களில் வினாடிக்கு1,130 கன அடி, 58 கிராம கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2,849 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 2,477 கன அடி தண்ணீா் வரத்து உள்ளது.

