காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி
தேனி மாவட்டம், போடியில் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்ட காவல் துறை சாா்பில் காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா பிரியா தலைமையில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேனி மாவட்ட காவல் துறை சாா்பில் போடியில் விழிப்பிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா பிரியா கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்றாா்.
இதில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள், பெண்கள் ஆகியோா் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு, போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல், தேசிய ஒருமைப்பாடு ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தி சென்றனா்.
பேரணி போடி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக வந்து போடி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில், நகா் காவல் துறையினா், பள்ளி மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.
