கம்பத்தில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையம், வணிக வளாகம், புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கம்பத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதே போல, கம்பம் உழவா் சந்தை அருகே ரூ. 1.78 கோயில் புதிய வணிக வளாகமும், ரூ.1.75 கோடியில் புதுப்பிட்ட பேருந்து நிலையமும் கட்டப்பட்டது. இந்தக் கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதற்காக, உழவா் சந்தை அருகே நடைபெற்ற விழாவுக்கு கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்தாா். கம்பம் நகராட்சி ஆணையா் உமாசங்கா், துணைத்தலைவி சுனோதா செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொறியாளா் சந்தோஷ்குமாா், நகரமைப்பு அலுவலா் கீதா, நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

