தொழிலாளி கொலை: மேலும் ஒருவா் கைது
போடி அருகே விவசாயத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குப்பிநாயக்கன்பட்டி, காளியம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ரமேஷ். இவா், காணாமல் போனதாக இவரது மனைவி மேகலா, போடி காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். இந்த நிலையில், வீரபாண்டி அருகே கிணற்றில் ரமேஷின் உடல் ஒரு வாரத்துக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப் படை அமைத்து விசாரித்து வந்தனா்.
போலீஸாரின் நீண்ட கால விசாரணையை அடுத்து, சொத்துப் பிரச்னையில் ரமேஷைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாக போடியைச் சோ்ந்த பாண்டி, கூடலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் செந்தில்குமாா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த ராமநாதன் ஆகியோரைத் தனிப் படை போலீஸாா் கடந்த 2025 நவம்பா் மாதம் கைது செய்தனா்.
இந்த நிலையில், ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேனி, வனச் சாலை 11-ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரத்தை (47) பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
