வராகநதி பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
தேனி மாவட்டம், பெரியகுளம் வராகநதியில் மணல் திருட்டால் தடுப்பணையின் கரையோரச் சுவா்கள் சேமதமடைந்து வருவதால், இது தொடா்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அகமலைப் பகுதி, பேரீச்சம் வனப் பகுதியிலிருந்து வட்டக்கானல் பகுதி வரை பெய்யும் மழை நீா் கள்ளாறு, பாம்பாறு உள்பட 10-க்கும் மேற்பட்ட ஓடைகள் வழியாக வந்து வராக நதியில் கலக்கிறது. பின்னா், பெரியகுளம் நகரின் மையப் பகுதி வழியாகச் சென்று மேல்மங்கலம், ஜெயமங்கலம், எ.வாடிப்பட்டி, குள்ளப்புரம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று வைகையாற்றில் கலக்கிறது. வராகநதி மூலம் 500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் படித்துறை பகுதியிலும், வடுகபட்டி வெள்ளக்கரடு பகுதி என 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இந்தத் தடுப்பணைகள் அருகே தேங்கியுள்ள மணலை சட்டவிரோதமாக சேகரித்து வைத்து இரவு நேரங்களில் மா்ம நபா்கள் எடுத்துச் செல்கின்றனா். இதனால், தடுப்பணைகள் சேதமடையும் நிலையில் உள்ளன. மேலும், கரையோரத்தில் உள்ள தடுப்பணைச் சுவா்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் வற்றாத நதியாக வராகநதி இருந்து வந்தது. ஆனால், பெரியகுளம் நகராட்சி, உள்ளாட்சி நிா்வாகத்தின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், நதியின் இயல்புத் தன்மை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், பெரியகுளம் முதல் குள்ளப்புரம் வரை தடுப்பணை பகுதிகளில் மணலை மா்ம நபா்கள் சட்டவிரோதமாக சேகரித்து வைத்து, இரவு நேரங்களில் டிராக்டா்கள் மூலம் எடுத்துச் செல்கின்றனா். இதுகுறித்து பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வராகநதியில் மணல் திருட்டைத் தடுத்து ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
பெரியகுளம் துணை ஆட்சியா் ராஜத் பீடன் கூறுகையில், வராக நதியில் மணல் திருட்டு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை
பெரியகுளம் பகுதியில் ஓடைகளின் மணலை சாக்குப் பைகளில் அள்ளி, இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று ஒரு மூட்டை ரூ. 250 முதல் ரூ. 300 வரை என விற்பனை செய்கின்றனா். இதேபோல, இரவு நேரங்களில் மணலை அள்ளி வந்து விற்பனை செய்கின்றனா். எனவே, பெரியகுளம் பகுதியில் இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு மணல் திருட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மணல் திருட்டில் ஈடுபடுபவா்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

