போடிமெட்டு மலைச் சாலையில் மண் சரிவு
போடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக போடிமெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், போடிமெட்டு மலைச்சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 13-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சிறிய மரங்களுடன் மண் சரிந்து சாலையின் ஒரு பகுதியை மூடியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல போடிமெட்டிலிருந்து மூணாறு - தேவிகுளம் செல்லும் சாலையில் பெரிய மரத்துடன் மண் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் வாகனங்களைக் கொண்டு மண் சரிவுகளை அகற்றினா். இதையடுத்து, இலகு ரக வாகனங்கள், தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. போடிமெட்டு மலைச்சாலையில் சில இடங்களில் பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்களில் செல்பவா்கள் வாகனங்களை நிறுத்தாமல், மிதமான வேகத்தில் செல்லும்படி காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
