தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

Published on

சின்னமனூரில் அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

சின்னமனூா், பொன்னகரம் பகுதியில் அரசு சாா்பில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வீடற்ற பட்டியலினத்தவருக்கு வீட்டுமனையிடம் வழங்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் பட்டியலினத்தவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு வருவாய்த் துறை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தவருக்கு வீட்டுமனை பட்டா வழங்காததால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், சின்னமனூரில் அரசு சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் பட்டியலினத்தவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலபாரதி தலைமையில், மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், டி. கண்ணன், சு. வெண்மணி, சி. முனீஸ்வரன், தேனி வட்டச் செயலா் இ. தா்மா், சின்னமனூா் ஒன்றியச் செயலா் அம்சமணி, சின்னமனூரைச் சோ்ந்த பட்டியலின மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸாா் தடுப்புக் கம்பிகள் அமைத்து அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் லெனின், மாவட்டக் குழு உறுப்பினா்கள் நாகராஜ், கரண்குமாா் ஆகியோா் காயமடைந்தனா்.

பிறகு, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் (பொறுப்பு) நல்லையா, வருவாய் துறை அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சம்பந்தப்பட்ட இடத்தை வகை மாற்றம் செய்து தகுதியுள்ள பட்டியலினத்தவருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com