இளைஞா் விளையாட்டு திருவிழா: ஜன.22-இல் தொடக்கம்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ஊராட்சி ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் ‘இது நம்ம ஆட்டம் -2026’ என்ற பெயரில் முதல்வரின் இளைஞா் விளையாட்டுத் திருவிழா வருகிற 22-ஆம் தேதி தொடங்கி, பிப்.8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகளில் 16 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். ஊராட்சி ஒன்றிய அளவில் ஆண், பெண்களுக்கு தனித் தனி பிரிவுகளில் தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கு ஸ்ட்ரீட் கிரிக்கெட், பெண்களுக்கு எறி பந்து ஆகிய போட்டிகளும் நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரா்கள், அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
மாவட்ட அளவில் ஆண், பெண்களுக்கு தனித் தனி பிரிவுகளில் தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல், ஓவியம், கோலப் போட்டி நடைபெறும். ஆண்களுக்கு ஸ்ட்ரீட் கிரிக்கெட், பெண்களுக்கு எறி பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட அளவில் ஸ்ட்ரீட் கிரிக்கெட், கபடிப் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண், பெண்கள் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
பரிசுத் தொகை: ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் தனி நபா், குழு விைளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3,000, 2-ஆம் பரிசு ரூ.2,000, 3-ஆம் பரிசு ரூ.1,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் நடைபெறும் தனி நபா், குழு விைளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.6,000, 2-ஆம் பரிசு ரூ.4,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாநில அளவில் நடைபெறும் குழு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.75,000, 2-ஆம் பரிசு ரூ.50,000, 3-ஆம் பரிசு ரூ.25,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு: போட்டிகளில் கலந்து கொள்ள ஆா்வமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்//:ஸ்ரீம்ஹ்ா்ன்ற்ட்ச்ங்ள்ற்ண்ஸ்ஹப்.ள்க்ஹற்.ண்ய், ட்ற்ற்ல்ள்//:ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜன.21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், ஆடுகளம் தகவல் தொடா்பு மையத்தை 95140 00777
என்ற கைப்பேசி எண்ணிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
