தொழில் சாலையில் இயந்திரங்கள் திருட்டு: பணியாளா் கைது!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஓடு தயாரிக்கும் தொழில் சாலையில் இயந்திரம், உபகரணங்களைத் திருடியதாக கேரளத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், பூக்குன்னம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்ஜலீல். இவா், கேரளத்தைச் சோ்ந்த 5 பேரை பங்குதாரா்களாக சோ்த்து ஆண்டிபட்டி அருகேயுள்ள கண்டமனூரில் ஓடு தயாரிக்கும் தொழில் சாலை நடத்தி வருகிறாா். இந்தத் தொழில் சாலையில் ஓடு விற்பனை மந்தமானதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பாடின்றி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொழில் சாலையில் அப்துல்ஜலீலின் பங்குதாரா்களுள் ஒருவரான ஆண்டோதாமஸின் மகன் தாமஸ், கண்டமனூரைச் சோ்ந்த கருப்பசாமி ஆகியோா் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்துல்ஜலீல், அவரது தொழில் சாலைக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, தொழில் சாலையிலிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், மின் மோட்டாா், உபகரணங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
மேலும், இவற்றை தொழில் சாலை பணியாளா்களான தாமஸ், கருப்பசாமி ஆகியோா் திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலையத்தில் அப்துல்ஜலீல் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தாமஸை கைது செய்தனா். கருப்பசாமியை தேடி வருகின்றனா்.
