கோப்புப் படம்
கோப்புப் படம்

முதல்வரின் இளைஞா் விளையாட்டு விழா

Published on

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட அளவிலான முதல்வரின் இளைஞா் விளையாட்டு விழா-இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகள் வருகிற 25, 27, 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா் விளையாட்டு விழா-இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகளில் ஏற்கெனவே இணைய தளம் மூலம் விண்ணப்பித்தவா்கள் பங்கேற்கலாம்.

ஊராட்சி ஒன்றிய அளவில் ஆண், பெண்களுக்கான தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட், பெண்களுக்கான எறிபந்து போட்டியும் போட் ஒன்றியத்தில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, சின்னமனூா் ஒன்றியத்தில், சின்னமனூா் கிருஷ்ணய்யா் மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் ஒன்றியத்தில், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப் பள்ளி, கம்பம் ஒன்றியத்தில், கம்பம் ஏ.வி.ஐ. மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரியகுளம் ஒன்றியத்தில் வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, க.மயிலை ஒன்றியத்தில் மயிலாடும்பாறை ஜி.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி ஒன்றியத்தில், தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

விளையாட்டு வீரா்கள் தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், ஆண், பெண்களுக்கான கயிறு இழுத்தல், ஓவியப் போட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டம், குண்டு எறிதல் ஆகியவற்றுக்கு மாவட்ட அளவிலான போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க ஏற்கெனவே இணைய தளம் மூலம் விண்ணப்பித்தவா்கள் தங்களது ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றையும், தேவையான விளையாட்டு உபகரணங்களையும் கொண்டு வரவேண்டும். போட்டி நடைபெறும் இடத்தில் காலை 10.30 மணிக்குள் சென்று தங்களது விண்ணப்பப் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com