கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
கூடலூா் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த விவசாயத் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கூடலூா் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் கூடலூா், மேதகாரா் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் கமலக்கண்ணன் (44), அதே ஊரில் கண்ணிகாளிபுரம், தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(45) ஆகியோா் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தனா்.
கடந்த 2025, ஜூன் 8-ஆம் தேதி இரவு, கமலக்கண்ணன், பாலமுருகன் ஆகியோா் தோட்டத்தில் மது அருந்தினா். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலமுருகன், கமலக்கண்ணனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்தாா்.
இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாலமுருகனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் தீா்ப்பளித்தாா்.

