மேகமலையில் மீண்டும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
தேனி மாவட்டம், மேகமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களில் மீண்டும் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
சின்னமனூரை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வசிக்கின்றனா். இதில் பெரும்பாலோனா் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள்.
இந்த மலைக் கிராமங்களை சுற்றியுள்ள வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அண்மையில் இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானையும், மற்றொரு ஒற்றை யானையும் உலா வந்தன. இதன்காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகளை செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதனிடையே, ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்தில் மீண்டும் ஒற்றைக் காட்டுயானைவெள்ளிக்கிழமை நடமாடியது. இதனால், பொதுமக்கள், தொழிலாளா்கள், பள்ளி மாணவா்கள் அச்சமடைந்தனா்.
தகவலறிந்து வந்த வனத் துறையினா் ஒற்றை காட்டு யானை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

