கேரளம் - தமிழகத்தை இணைக்கும் கட்டப்பனை - கம்பம் சுரங்கப் பாதைத் திட்டத்தின் வரைபடம்.
கேரளம் - தமிழகத்தை இணைக்கும் கட்டப்பனை - கம்பம் சுரங்கப் பாதைத் திட்டத்தின் வரைபடம்.

தேனி - இடுக்கி சுரங்கப் பாதைத் திட்டம்: கேரள பட்ஜெட்டில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

கேரள மாநிலத்தின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கட்டப்பனை (இடுக்கி) - கம்பம் (தேனி) சுரங்கப் பாதைத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Published on

கேரள மாநிலத்தின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கட்டப்பனை (இடுக்கி) - கம்பம் (தேனி) சுரங்கப் பாதைத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் கனவுத் திட்டமான கட்டப்பனை - கம்பம் சுரங்கப் பாதைத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல் கட்டமாக கேரள நிதியமைச்சா் கே.என். பாலகோபால் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தாா். இந்தத் திட்டத்தின் மொத்தத் திட்ட மதிப்பு ரூ. 1,182.43 கோடி ஆகும்.

ஆபத்தான கொண்ட ஊசி வளைவுகளில் கம்பத்திலிருந்து கட்டப்பனை செல்ல 40 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்ய சுமாா் 90 நிமிஷங்கள் ஆகும். ஆனால், இந்த மலைகளுக்கிடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையால் 12 முதல் 15 கி.மீ. தொலைவாகக் குறைந்து, 30 நிமிஷங்களில் சென்றுவிடலாம்.

இதன் மூலம் எரிபெருள், பயணம் நேரம் குறைந்து சுற்றுச்சுழல் பாதிப்பும் குறையும். மேலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு அவசர மருத்துவச் சிகிச்சைக்கு செல்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இரு மாநிலத்துக்கிடையே வா்த்தகம், சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் 500 முதல் 900 மீ. உயரம் கொண்ட மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்புள்ளது. இதற்காக, தமிழகம் - கேரளத்தைச் சோ்ந்த வனத் துறையினா், மத்திய - மாநில அரசுகள், பொறியாளா் நிபுணா்கள் மூலமாக ஆய்வு செய்யப்படும். மலையைக் குடைந்து அமைக்கும் இந்தப் பணியால் மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணைகள், வன விலங்குகள், இயற்கை, சுற்றுச்சுழல் உள்ளிட்டவைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்குமா என்ற நோக்கில் முதல் கட்டமாக ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்தத் திட்டத்தைப் போன்று, கேரளம் - தமிழ்நாட்டை இணைக்கும் குதிரைவாலி சுரங்கப்பாதை (பாலக்கோடு) பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளதால் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Dinamani
www.dinamani.com