/

ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளஎள் விளைச்சல்: நல்லெண்ணெய் விலை உயர வாய்ப்பு இல்லை!

சமையலில் இன்றியமையாதது நல்லெண்ணெய்யாகும். இதில், சில மருத்துவக் குணங்களும் உள்ளன. இந்த எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த எண்ணெய்

Updated On :26 நவம்பர் 2016, 7:14 pm

சமையலில் இன்றியமையாதது நல்லெண்ணெய்யாகும். இதில், சில மருத்துவக் குணங்களும் உள்ளன. இந்த எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த எண்ணெய் ஆரோக்கியமான வகையைச் சேர்ந்தது. இந்திய சமையலில் அதிகமாகப் பயன்படுத்தும் எண்ணெய்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இதில், கால்சியம், மக்னீசியம், செம்பு, துத்தநாகம், இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் பி.இ. போன்ற விட்டமின் சத்துகள் உள்ளன. இதில், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எந்த வெப்பநிலையிலும் மாறாத குணம் கொண்டது. ஆயுர்வேதத்துக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் ஆகிய மூன்று மாநில மக்கள் சமையலில் நல்லெண்ணெயை தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
எனினும், இந்தியா முழுவதும் உள்ள தமிழர்களும், வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் இந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். நமது பாரம்பரிய எண்ணெய்களில் இதுவும் ஒன்றாகும். முன்பு செக்கில் மாட்டினை கட்டி எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்க இயந்திரம் வந்துவிட்டது. இதையே "எக்ஸ்பல்லர்' எண்ணெய் எனக் கூறுகிறார்கள்.
எள் தரமானதாக இருந்தால்தான் தரமான நல்லெண்ணெய் கிடைக்கும். எள் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் விளைகிறது. இது குறித்து விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பாளர் வி.ஆர். முத்து கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு எள் விளைச்சல் 7 லட்சம் டன் ஆகும். இதில், 4 லட்சம் டன் எள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 75 கிலோ எள் மூட்டை மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஏற்றுமதி அதிகரிப்பால் மூட்டை ரூ.10 ஆயிரமானது. உலக அளவில் எள்ளுக்கு நல்ல விலை கிடைத்து வந்ததையடுத்து, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எள் பெருமளவு பயிடப்பட்டு நல்ல விளைச்சல் காணப்படுகிறது. இதையடுத்து, இந்திய எள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எள் இங்கு இறக்குமதி செய்யப்படுவதால், நல்லெண்ணெய் விலை சீராக உள்ளது. மேலும், விலை உயருவதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
சமையலுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உபயோகத்தை நாம் குறைத்துவிட்டோம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெயை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டோம்.
எனினும், சமையலுக்கும், மருத்துவத்துக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தி வருவது ஆறுதல் தருகிறது. நல்லெண்ணெய் போன்ற உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அரசு வரி விலக்கு அளித்தால் மேலும் நமது பாரம்பரிய எண்ணெயை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கி, ஆரோக்கியத்தையும் பாதுகாப்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.